இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அலுவலர்களால் ஜூன் 11, 2025 அன்று அட்மிரல் சோமதிலகே திசாநாயக்க கேட்போர் கூடத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவுகளின் (IAUs) பொறுப்புக்கள் மற்றும் பணிகள்; குறித்த தகவல் பரிமாற்ற அமர்வு வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. சமீபத்தில் நிறுவப்பட்ட IAU-கள் தொடர்பில் இலங்கை கடற்படையில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் அறிவை மேம்படுத்துவதற்காக இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
விழிப்புணர்வு நிகழ்வுக்கு முன்னதாக, (CIABOC) இன் ஆணையாளர் III, சனாதிபதி சட்டத்தரணி திரு. சேதியா குணசேகர தலைமையிலான குழு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொடவை மரியாதை நிமித்தமாக சந்தித்தது. விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உரையாற்றிய கடற்படைத் தளபதி, எந்தவொரு அமைப்பினுள்ளும் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நேர்மைத்திறன் ஆகியவற்றின் மதிப்புகளை வலியுறுத்தும் அதே வேளையில், நேர்மைக் கலாச்சாரத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மூன்று விரிவான விரிவுரை அமர்வுகள் இடம்பெற்றன, அவை ஆணையாளர் III - திரு. சேதியா குணசேகர அவர்கள் 2023 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் விரிவான பகுப்பாய்வை வழங்கியதுடன் உள்ளக அலுவல்கள் பிரிவுகளின் பொறுப்புக்கள் மற்றும் பணிகள் குறித்தும்; சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் வெளிப்படுத்தல் சட்டம் மற்றும் முரண்பாட்டு ஆர்வங்களை வெளிப்படுத்துதல் தொடர்பில் உதவி பணிப்பாளர் நாயகம்; தனுஜா பண்டாராவால் விளக்கமளிக்கப்பட்டதுடன் ஊழல் தடுப்பு நிவாரண உத்தியோகத்தர் திருமதி உதேஷிகா ஜெயசேகராவால் இலஞ்சம் மற்றும் ஊழலின் சமூக பாதிப்புக்கள் தொடர்பில் தெளிவூட்டப்பட்டது.
கடற்படை கட்டளைகள் மற்றும் கடற்படை தலைமையகங்களில் நிறுவப்பட்ட IAU களைச் சேர்ந்த 72 அதிகாரிகள் மற்றும் 27 மாலுமிகள் உட்பட சிரேஸ்ட அதிகாரிகள் குழு இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.























