Steel Impex and Industries எனும் இந்திய தனியார் நிறுவனம் மூலமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சுங்க வரி இன்றி இறக்குமதி செய்யப்பட்ட பேரூந்து உதிரிப் பாகங்கள் தொடர்பாக இலங்கை சுங்கத்தினால் மெற்கொள்ளப்படும் விசாரணைகளை நிறுத்துவதற்கு மற்றும் செலுத்த வேண்டிய வரித் தொகையை செலுத்தாமல் இருப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு குறித்த வழக்கின் முறைப்பாட்டாளரிடமிருந்து 15 கோடி ரூபாய் இலஞ்சமாகக் கேட்டு அதனை 12.5 கோடி ரூபாயாகக் குறைத்து பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக்கப்பட்ட இலங்கை சுங்கத்தின் சுங்க அத்தியட்சகர்கள் மூவர் மற்றும் உதவிச்சுங்க அத்தியட்சகர் ஒருவருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் 2021.07.29 அன்று தாக்கல் செய்யப்பட்ட அதிகுற்றச்சாட்டுப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் குறித்த சந்தேக நபர்களை குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்த மேல் நீதிமன்றம் அவர்களுக்கு 35 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கியது. குறித்த தண்டனைக்கு மேலதிகமாக அரசுக்கு அபராதமாக தலா 12.5 கோடி ரூபாய் வழங்குமாறும் குறித்த குற்றவாளிகளுக்கு ஆணையிடப்பட்டது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு பேரூந்து உதிரிப்பாகங்கள் மற்றும் டயர்களை வழங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்ட Steel Impex and Industries எனும் இந்திய நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட சுங்க வரி மற்றும் ஏனைய வரிகளிலிருந்து விடுதலை அளிக்கப்பட்டிருந்த உதிரிப்பாகங்களை போக்குவரத்து சபையின் டிபோக்களுக்கு விற்பனை செய்யும் போது சுங்க வரி மற்றும் வட் வரி ஊழல்கள் நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிட்டு சந்தேக நபர்களால் 2014 ஆம் ஆண்டு முறைப்பாட்டாளருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. குறித்த விசாரணைகளின் போது வரிவிலக்கு வழங்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டிருந்தாலும் முறைப்பாட்டாளரிடமிருந்து இலஞ்சத் தொகையொன்றினை பெற்றுக் கொள்ளும் நோக்கில் முறைகேடான முறையில் விசாரணைகளை தொடர்ந்து நடத்தி அவ்விசாரணைகளை முடிவுறுத்துவதற்காக 15 கோடி ரூபாயை இலஞ்சமாகக் கேட்டு அதனை 12.5 கோடி ரூபாயாக குறைத்துள்ளதாக 2015.09.22 அன்று முறைப்பாட்டாளர் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஆணைக்குழுவினால் விசாரணைகளை மேற்கொண்டு, ஒழுங்கமைக்கப்பட்ட சுற்றிவளைப்பின் மூலமாக குறித்த சந்தேக நபர்களை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் 14 குற்றச்சாட்டுக்களில் சந்தேக நபர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.
பிரதி சொலிசிடர் ஜனரால் ஜனக பண்டார, உதவிப் பணிப்பாளர் நாயகம் தனுஜா பண்டார, சிரேஸ்ட அரச சட்டத்தரணி உதார கருணாதிலக மற்றும் உதவிப் பணிப்பாளர் (சட்டம்) அனுசா சம்மந்தப்பெரும ஆகியோர் முறைப்பாட்டிற்காக இவ்வழக்கில் தோற்றினர்.