பொத்துவில் இலங்கை போக்குவரத்து சபை காரியாலயத்தில் கடமையாற்றும் நடத்துனர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் அகில இலங்கை மோட்டார் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராக கடமையாற்றிவந்த (சிரேஷ்ட டெப்போ பரிசோதகர்) ஒருவர் இலஞ்சம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் 2023.06.12 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய
சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்துள்ளார்.
முறைப்பாட்டாளர் அகில இலங்கை மோட்டார் தொழிலாளர் சங்கத்தின் கிழக்கு மாகாண பிரதிநிதியாக கடமையாற்றுவதற்காக தனது நடத்துனர் கடமைகளில் இருந்து முழுநேரமாக விடுவிக்கப்பட்டிருந்தார். அவர், தனது சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்காக மாதாந்த கடமைகளை முறையாக நிறைவேற்றியுள்ளார் என்பதை சான்றுப்படுத்துவதற்காக சங்கத்தின் பொதுச் செயலாளரின் சிபாரிசு கடிதத்தை கோரியுள்ளார். குறித்த கடிதத்தை வழங்குவதற்கும், அவரது சம்பளத்தை முறையாகப் பெறுவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கும் பொதுச் செயலாளர் அவரிடமிருந்து ரூ.10,000/- லஞ்சம் கோரியுள்ளார். அதன் அடிப்படையில் குறித்த பொதுச் செயலாளர் புரக்கோட்டை மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் குறித்த இலஞ்சத்தை பெற்றுக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டார்.