இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஆணையாளர்களுக்கும் பொலீஸ் மாஅதிபருக்கும் (பதில் கடமை) இடையிலான விஷேட சந்திப்பொன்று 2024 ஜனவரி 17ம் திகதி ஆணைக்குழுவில் இடம்பெற்றதுடன், ஆணைக்குழுவின் புலனாய்வுப் பிரிவினை மேம்படுத்துவது தொடர்பான பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன. இதனடிப்படையில், பொலீஸ் திணைக்களத்தில் கடமை புரியும் புலனாய்வு தொடர்பான அறிவும், அனுபவமும் மிக்க அதிகாரிகளை ஆணைக்குழுவின் புலனாய்வுப் பிரிவிற்கு இணைப்பாக்கம் செய்வதற்கும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் பதிதாக உருவாக்கப்பட்ட துறைகளான பண மோசடி மற்றும் தடயவியல் புலனாய்வு விடயங்கள் தொடர்பாகவும் மற்றும் புதிய சட்டத்திற்கு உள்வாங்கப்பட்ட ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன் தற்பொழுது ஆணைக்குழுவில் கடமை புரியும் புலனாய்வு அதிகாரிகளுக்கு விடய அறிவினைப் பெற்றுக்கொடுத்தல், புதிய சட்டத்தின் அடிப்படையில் கூட்டு விசாரணையில் ஈடுபடுவது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
மேலும், போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலீஸ் அதிகாரிகள் இலஞ்சம் பெறுவது தொடர்பான முறைப்பாடுகள் அதிகமாக கிடைக்கப் பெறுவதனால் தற்போது நடைமுறையில் உள்ள தண்டப்பணம் செலுத்தும் முறையில் மாற்றங்கள் கொண்டு வருவது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.