இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவானது ஊழலை இல்லாதொழிப்பதற்கான பணியில் ஓர் அங்கமாக கொழும்பில் உள்ள ஹோட்டல் தாஜ் சமுத்ராவில், 2018 மார்ச் 12, மற்றும் 13 ஆம் திகதிகளில் இரண்டு நாள் செயலமர்வினை “சொத்துக்கள் வெளிப்படுத்தல் மற்றும் ஆர்வ முரண்பாடுகளில் இருந்து பொதுத்துறையினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள்” எனும் தொனிப்பொருளில் CIABOC, ஐக்கிய நாடுகள் சபையின் அபாயகர மருந்துகள், குற்றங்களுக்கான அலுவலகம் (UNODC) மற்றும் திருடப்பட்ட சொத்து மீட்புத் திட்டம் (StAR), உலக வங்கி (WB) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் நடாத்தியது.
பிரதான அரச மற்றும் அரச சாரா நிறுவனங்களின் சிரேஷ்ட மட்ட அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் சிறப்புக் கலந்துரையாடல்கள் மற்றும் வினைத்திறன்மிக்க முன்வைப்புக்களுடன் சொத்துக்கள் வெளிப்படுத்தல் மற்றும் சரிபார்ப்பில் உலகலாவிய நடைமுறைகளின் அனுபவத்திற்கு இணங்க திருத்தங்கள் கலந்துரையாடல்களின் ஊடாக ஆராய்வுக்குற்படுத்தப்பட்டன. 1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் சட்டத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களை முன்னெடுப்பதற்கான முயற்சியாகவே இச்செயலமர்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.