உலகளாவிய நிபுணர் குழு கூட்டத்தினை (EGM)இலங்கைத் திருநாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து ஆரம்பித்து வைத்தார். கொழும்பு தாஜ்சமுத்ராவில் நடைபெற்ற நிகழவில் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் உரைநிகழ்த்தும் போது அதிகாரமும் ஊழலும் இன்று தலைவிரித்தாடுகின்றது. ஊழலுக்கு எதிரான நிறுவனங்கள் தொடர்பான சட்ட திருத்தங்கள் மற்றும் மறுசீரமைப்புக்களுடன், ஊழலற்ற தேசத்தினை உருவாக்க ஸ்த்திரமான அரசியல் அபிலாசையும், அனைவரினதும் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமாகும் என தனது உரையினூடே தெளிவுபடுத்தினார்.
30 க்கும் அதிகமான நாடுகளின் நிபுணர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்ட கடந்த மூன்று நாட்களில் முன்னெடுத்த கலந்துரையாடல்களினூடே ஜகார்த்தா பிரகடனத்தின் அடிப்படையில் கொழும்பு பிரகடனத்தை தயாரிக்கும் வகையில் ஐக்கிய நாடுகளின் ஊழலுக்கு எதிரான சமவாயத்தின் அங்கத்துவ நாடுகளில் நிறுவப்பட்டுள்ள ஊழலுக்கு எதிராக நிறுவனங்களை உண்மையிலேயே பலமிக்கதாகவும், சுயாதீனமானதாகவும் மாற்றுவதற்கான வழிமுறைகளே ஆராய்வுக்குற்பட்டன. முதல் நாள் அமர்வானது தற்போதைய மற்றும் முன்னாள் ஊழலுக்கு எதிரான நிறுவனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இந்துனேசியா, மலேசியா, பங்களாதேஷ், மொரிஷியஸ், உக்ரைன், நைஜீரியா, துனிசியா, ஸ்லோவேனியா மற்றும் பெரு ஆகிய நாடுகளின் அதிகாரிகள் ஊழலற்ற சுதந்திரமான, தேசத்தை உருவாக்குவது தொடர்பிலான சுயாதீன ஆணைக்குழுக்களின் உருவாக்கம் தொடர்பில் தத்தமது நாடுகளின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.