முச்சக்கர வண்டி சாரதியொருவரின் போக்குவரத்து சார் தவறொன்றிற்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்காதிருப்பதற்காக 500 ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற, போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலீஸ் அதிகாரியொருவர் குற்றவாளியாக்கப்பட்டுள்ளார்.
இப்பணத்தை கேட்டுப் பெற்றமை தொடர்பாக போக்குவரத்து பிரதிப்பொலீஸ் அவர்களினால் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில், இந்நிகழ்வு தொடர்பாக திறந்த விசாரணை ஒன்றை மேற்கொண்டு 4 குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தை தெளிவு படுத்தியதன் பின்னர் கணம் மஜிஸ்திரேட் அவர்களால் வழக்குத் தொடுக்கப்பட்டது.
நீண்ட விசாரணைக்குப்பின் கணம் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன அல்விஸ் அவர்களால் குற்றவாளிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 04 குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. எனவே தலா ஒவ்வொரு குற்றங்களுக்கும் 01 வருடம் வீதம் 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு குற்றங்களுக்கும் தலா 5000.00 ரூபாய் வீதம் 20000.00 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் 1954ஆம் ஆண்டின் 11ம் இலக்க இலஞ்ச சட்டத்தின் கீழ் இலஞ்சமாகப் பெற்ற 500.00 ரூபாய் தண்டப்பணமாக வசூலிக்கப்பட்டது.
இவ்வழக்கானது இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினை பிரதிநிதித்துவப்படுத்தி உதவிப்பணிப்பாளர் (சட்டம்) உதாரி குமாரிஹாமி அவர்களால் முன்னெடுக்கப்பட்டது.