இலங்கை சுங்கத்தினால் அனுமதியளிக்கப்படாத கிட்டத்தட்ட 400 வாகனங்கள் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினரால் மோசடியான முறைகளில் பதிவு செய்துள்ளமை தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு கிடைத்த தகவல்களை அடுத்து அதில் 178 வாகனங்கள் பற்றிய உண்மைத்தகவல்கள் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டன.
இன்றைய தினம் ஆணைக்குழுவினால் அவ்வாகனங்களில் 51 இற்கு ‘பீ’ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன், இலங்கை சுங்கத்தினால் இவ்வாகனங்களுக்கு அனுமதியளிக்கப் படவில்லை என்பதாகவும் இதனால் சட்ட விரோதமாக இவ்வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு சட்ட விரோதமாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டதன் மூலம் இலங்கைக்கு வர வேண்டிய வரி வருமானம் மோசடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த காலப்பகுதிக்குள் வாகனத்தை உரிமை மாற்றுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதனால் அதனை தற்காலிகமாக தடுக்குமாறு ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதிவானிடம் மனுவொன்று முன்வைக்கப்பட்டது. எனவே, அந்த 51 வாகனங்களினதும் உரிமை மாற்றத்தை தடை செய்யுமாறு 2024.04.05 அன்று கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன டி அல்விஸ் அவர்களால் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திற்கு கட்டளையிடப்பட்டது. அவ்வாறு தடை செய்யப்பட்ட வாகனங்களில் 3 ஜீப் வண்டிகள், லாண்ட் குரூசர் 24, மொன்டெரோ 18, மற்றும் அதி சொகுசு கப் வண்டிகள் 06ம் அடங்கும்.
இவ்வாகனங்களை சட்ட விரோதமாக பதிவு செய்ததன் மூலம் அரசுக்கு 300 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.