2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 112ஆம் பிரிவின் அடிப்படையில் பணம் தூய்தாக்கல் தொடர்பான குற்றங்களை புலனாய்வு செய்வதற்கான அதிகாரம் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பொறுப்பானது தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக வழங்கப்பட்டுள்ளது. விசேடமாக நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழுவின் கீழ் இலங்கை 2025 மார்ச் மாதத்தில் இவ்விடயம் தொடர்பாக பன்கூட்டு மதிப்பிடுகை ஒன்றைச் செய்யவுள்ளது. அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் மூலமும் பணம் தூய்தாக்கல் தொடர்பாக புலனாய்வு செய்தல் மற்றும் வழக்குத் தொடுத்தல் செயற்பாடுகளை பலப்படுத்துதல் தொடர்பாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, தேசிய மற்றும் சர்வதேச தேவைப்பாடுகளை கருத்திற்கொண்டு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் பணம் தூய்தாக்கல் தொடர்பாக புதிய பிரிவொன்று தாபிக்கப்பட்டுள்ளது. அதற்காக தற்போது ஆணைக்குழுவில் கடமையாற்றும் அதிகாரிகள் சிலர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து இவ்விடயம் தொடர்பாக விசேட திறமையுள்ளவர்களை ஆணைக்குழுவிற்கு இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்திற்கு முன்னதாக இலஞ்ச சட்டம், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்துவது தொடர்பான சட்டம் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழச் சட்டம் என்பவற்றின் கீழ் பணம் தூய்தாக்கல் தொடர்பான புலனாய்வு அதிகாரம் ஆணைக்குழுவிடம் காணப்படவில்லை. எனினும், அக்காலப்பகுதியில் பணம் தூய்தாக்கல் தொடர்பாக ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடுகள் அது தொடர்பான அதிகாரமுடைய ஏனைய நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், 2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டம் 2023 செப்தம்பர் 15 முதல் நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து பணம் தூய்தாக்கல் விசாரணைப் பிரிவினை ஆணைக்குழுவில் நிறுவுவுதன் மூலம் ஆணைக்குழுவிற்கு கிடைக்கும் பணம் தூய்தாக்கல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்யவும் அது தொடர்பாக வழக்குத் தொடுக்கவும் முடியும்.